மொட்டை மாடியும் சில இரவுகளும்...!



"இரவு என்பது ஒரு கையால் அள்ளி எடுக்க முடியாத ஒரு திரவம், அது எல்லாத் திசைகளிலும் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது"

"இரெவென்னும் வினோத மலர் எண்ண முடியாத இதழ்கள் கொண்டது. இரவின் கைகள் உலகைத் தழுவிக்கொள்கின்றன. அதன் ஆலிங்கனத்திலிருந்து விடுபடுவது எளிதானதில்லை."


- "யாமம்" நாவலில் எஸ்.ராமகிருஷ்ணன்

கவிந்து,சூழ்ந்து, எங்கும் வியாபித்து நீக்கமற நிறைந்திருக்கும் ஓர் ஆழ்ந்த இரவு ஒவ்வொரு முறையும் புதிய வடிவத்தில் சிந்தனையைத் தட்டி எழுப்பிக் கொண்டே இருக்கின்றன..

அத்தகைய இரவுக்கும் எனக்குமான பந்ததுக்கு உற்ற துணையாக இருந்தது என் வீட்டு மொட்டை மாடி
("வெற்றுத் தளம்" என்று மொழி பெயர்க்கலாம் தானே?)யும் அது அளந்து கொண்டிருந்த வான்வெளியும்..

ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது மண்டை பிளக்கும் வெயிலுடன் ஒரு மதியப் பொழுதில் என் முதல் வெற்றுத் தள அறிமுகம் அமையப் பெற்றது..

மூன்று அடுக்கு வீட்டின் மேல் தட்டுக்கு தட்டுத் தடுமாறி கைபிடியற்ற படியேறி சாகசம் மேற்கொண்டு, நின்று முதன் முதலாக எல்லாக் கோணத்திலும் எங்கள் ஊரை நோட்டம் விடுகையில் அருகிருந்த தென்னை மரத்தில் சுனாமிக் காற்று தாக்குதல் திக்குமுக்காடச் செய்தது..

என்னை கைபிடி சுவரற்ற தளத்திலிருந்து கீழே சாய்க்கும் முனைப்போடு தொடர்ந்து புயல் காற்று அடித்துக் கொண்டிருக்க நடுக்கத்தோடே இறங்கினேன்.. முதன் முதலில் காதலன் விரல் பிடித்த காதலியிடம் ஏற்படும் நடுக்கம் போல அந்த நடுக்கம் என்னைச் சூழ்ந்து கொண்டது... அதன் பின் எனக்கு அந்த மூன்றாவது வெற்றுத் தளம் ஒரு அதிபயங்கர மரணக் குகை போலவே தோன்றியது...

இரவுகளும் அது கொண்ட ரகசியங்களும் எப்போதும் அதன் வழியில் சென்று கொண்டே இருக்க காலம் நகர்ந்து கொண்டே இருந்தது..

(இரவுகளின் வாசனைகள் தொடரும்...)

திருக்குறள்

About this blog

Followers

About Me

My photo
பூக்கள் நடுவில் அமர்ந்து கொண்டு முட்கள் பற்றியும் யோசிப்பவள், மழைச்சாரல் தந்த ஈரம் கொண்டு வெயில் பற்றியும் பயில்பவள், குடிசையில் அமர்ந்து கொண்டு செவ்வாய் நோக்கி சிந்திப்பவள், நல்லவை தந்த தைரியம் கொண்டு அல்லவைகளைக் கொல்பவள். என் எண்ணத்தில் வளர்ந்த பூக்கள் உங்கள் முன்.. நன்றிகளுடன், பூமகள்.